நாடாளுமன்றத் தேர்தல் - 2


பகுதி – 2

     நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டில் 40 எம்.பிக்கள் என மொத்த இந்தியாவில் 545 எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் எனப் பார்த்தோம். எதற்காகச் செல்கிறார்கள்? நமது பிரதிநிதியாக மாநிலங்களின் குரலை அங்கு பிரதிபலிக்க, மக்களுக்கு, மாநிலத்திற்கு, நாட்டிற்குத் தேவையான சட்ட திட்டங்களை வகுக்க, செயல்படுத்தவே செல்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு மாநிலத்தை நிர்வகிக்கும் மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரம், நாட்டினை நிர்வகிக்கும் ஒன்றிய அரசுக்கு என்னென்ன அதிகாரம், இரு அரசுகளுக்குமான பொது அதிகாரங்கள் என்னென்ன என வகைப்படுத்தி உள்ளது. யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது எனத்தெரிந்து கொண்டால் தான் நம் பிரச்சனைகள், நம் தேவைகளுக்கு ஏற்றபடி நம்மால் மாநில, மத்திய அரசுகளை தேர்ந்தெடுக்க முடியும்.

     மாநில அரசுக்கான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலில் அடங்கும், மத்திய அரசுக்கான அதிகாரங்கள் ஒன்றியப்பட்டியலில் இருக்கும். இருவரும் சேர்ந்து முடிவெடுப்பவை பொதுப்பட்டியலில் இருக்கும். அதாவது பேருந்து போக்குவரத்து வசதிகளை உருவாக்குவது, மேம்படுத்துவது, பேருந்து கட்டணத்தை விதிப்பது, முறைப்படுத்துவது ஆகியவற்றை மாநில அரசே நிர்ணயிக்க முடியும். இதே போன்று காவல் துறை, சாலைகள், பாலங்கள் அமைத்தல், டாஸ்மாக், நியாயவிலைக்கடைகள்(ரேஷன்) போன்ற 62 துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  இரயில் போக்குவரத்து, GST போன்ற வரிகளை விதிப்பது, இராணுவம், தகவல் தொடர்பு போன்ற 96 துறைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில துறைகள் ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டின் கீழும் வரும். உதாரணத்திற்கு கல்வி. நமது ஊரில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்தல், புதிய பள்ளிகள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல், அவர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகியவற்றை மாநில அரசே செய்யும். அதே போல கேந்திரிய வித்யாலயா எனப்படும் பள்ளிகள், CBSE பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் ஒன்றிய அரசின் கீழ் வரும். சட்டம், மருத்துவம், தொழிற்கல்வி போன்ற உயர்கல்விகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோன்று 47 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகள் மாநில, ஒன்றிய அரசு இரண்டின் கீழ் வந்தாலும் ஒன்றிய அரசுக்கே அதிகாரம் இருக்கும். அதனால் தான் கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும் நீட் தேர்வு போன்றவற்றில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது. தமிழக மக்களின் தொடர் எதிர்ப்பால் நீட் தேர்வை ரத்து செய்வது, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது போன்ற கோரிக்கைகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கைகளில் கட்சிகள் சில முன் வைத்துள்ளன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் தமிழ்நாட்டின் நீர், மண், மலை போன்ற வளங்களை மீட்பது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பது, கல்வி, மருத்துவம், அனைவருக்குமானாதாக மாறுவது போன்ற மாற்றங்களுக்கு சரியான மாநில அரசை தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றிய அரசைத் தேர்வு செய்வது.

ஒன்றிய அரசு என்றால் என்ன? ஒன்றிய அரசு எவ்வாறு உருவாகிறது? எப்படி செயல்படுகிறது? ஒன்றிய அரசில் நாம் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

-தொடரும்
சூர்யா

Comments

Popular posts from this blog

வரலாறு அறிவோம் – 4

வரலாறு அறிவோம் - 2

வரலாறு அறிவோம் - 3