வரலாறு அறிவோம் - 2
வரலாறு அறிவோம் - 2
தொல் தமிழ்
தமிழ் மொழியின் எழுத்து வடிவம் இப்போது இருப்பதைப் போல் முற்காலத்தில் இல்லை. தற்காலத் தமிழ் எழுத்துக்களின் எளிய வடிவமாகக் கல்லில் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக எழுத்துக்கள் உருவாகின.
இத்தொல் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அப்போதைய ஆய்வாளர்கள் தமிழ் பிராமி எனத் தவறாகப் பெயரிட்டு விட்டனர். பின்னர் வந்த ஆய்வாளர்கள் இதனைத் தொல் தமிழ், பண்டைய தமிழ், தமிழி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். நாமும் தொல் தமிழ் என்றே அழைக்கலாம்.
தொல் தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் குறியீடுகள் புழக்கத்தில் இருந்தது. பின்னரே எழுத்துக்கள் உருவாயின. குறியீடுகள் குறித்து அடுத்ததடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
தொல் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப் பட்ட காலம் என ஆய்வாளர்கள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்ட காலம் பொ.யு.மு 500 முதல் பொ. யு. 300 வரை. பொருந்தல் என்ற இடத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்புடன் உள்ள பானை ஓட்டின் காலம் பொ. யு. மு 500 என கணிக்கப் பட்டுள்ளது. எனவே தொல் தமிழ் அதற்கு முன்னதாக உருவானதாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்னும் பெரிய பரப்பளவுகளில் ஆய்வுகள் செய்யப் படாததால், தொடக்க நிலையிலேயே உள்ளதால் தற்போது வரை நடந்த ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளை வைத்தே காலங்கள் கணிக்கப் படுகிறது.
தொல் தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில், நடுகற்களில், அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளில் இருந்து கண்டெடுக்கப் படுகின்றன.
முதலில் அந்த எழுத்துக்களை படிக்க முடியவில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவை படிக்கப் பட்டன.


Comments
Post a Comment