வரலாறு அறிவோம் - 3

வரலாறு அறிவோம் - 3

தொல் எழுத்து ஆய்வின் வரலாறு

நம் நாட்டின் தொல்லியல் வரலாறு குறித்த ஆய்வினை தொடங்கி வைத்து, தொடர்ந்து பல கல்வெட்டுக்களை ஆராய்ந்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களுடன் இணைந்து இந்திய அறிஞர்களும் பணியாற்றினர்.
இந்தியாவில் கல்கத்தா கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி சர் வில்லியம் ஜோன்ஸ் ஆகியோரால் 1783 ஜனவரி 15 ஆம் நாள் வங்காள ஆசியவியல் கழகம் நிறுவப் பட்டது. இக்கழகம் ஏசியாட்டிக் ரிசர்ச்சஸ் என்ற ஆய்விதழை வெளியிட்டது. இதுவே இந்திய வரலாற்றைப் பற்றிய அறிவு வளர்ச்சியில் முதல் ஆய்வு நூல்.
ஜோசப் பிரின்சப், ஜார்ஜ் பியூலர், ஓஜா ஆகியோர் இந்திய எழுத்து வரி வடிவ வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடிகள் ஆவர். இன்னும் பலரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏ. சி. பர்னல், டி. ஏ. கோபி நாதராவ், கே.வி. சுப்ரமணிய ஐயர், தி. ந. ராமச்சந்திரன், எஸ். எச். ரித்தி, ஐராவதம் மகாதேவன், டி. வி. மகாலிங்கம், இரா. நாகசாமி, கே.ஜி. கிருஷ்ணன், நடன. காசிநாதன், எ. சுப்புராயலு, புலவர் செ. இராசு, என். சேதுராமன் ஆகியோர் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி பற்றி ஆய்வு செய்தனர்.
1886 இல் சென்னை மாகாண அரசு கல்வெட்டாய்வாளர் பதவியை உருவாக்கி முதல் கல்வெட்டு ஆய்வாளராக இ. ஹூல்ட்ச் அவர்களை நியமித்தது. 1967 க்குப் பிறகு இதன் அலுவலகம் மைசூருக்கு மாற்றபட்டு தற்போது வரை மைசூரில் இயங்கி வருகிறது.
இதன் கீழ் ஆண்டுதோறும் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப் பட்டது. முதலில் சென்னை கல்வெட்டு அறிக்கைகள்(Madras Epigraphcal Reports) எனப் பெயரிடப்பட்டு பின்னர் தென்னிந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை (Annual Report on South Indian Epigraphy) என பெயர் மாற்றம் செய்யப் பட்டு வெளியானது. மீண்டும் இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கைகள் (Annual Report on Indian Epigraphy) என்ற பெயர் மாற்றம் செய்யப் பட்டு தற்போது இப்பெயரிலேயே வெளியிடப் படுகிறது.
இவை தொடர்ந்து வெளியிடப் பட்டாலும் அனைத்து கல்வெட்டுகளும் வெளிவந்து விட்டன என்று கூற இயலாது.
1961 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை தொடங்கப் பட்டது. இதன் சார்பாக கல்வெட்டு என்ற பெயரில் காலாண்டு ஆய்விதழ் வெளியிடப் படுகிறது. இத்துறையின் மூலம் கல்வெட்டுகள் குறித்த பட்டய படிப்பு வகுப்பு தொடங்கப் பட்டு பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. பல பல்கலைக் கழகங்களில் இதற்கென துறை உருவாக்கப் பட்டுள்ளது.
தவிர தனிப்பட்ட ஆய்வாளர்களும் நிறைய கல்வெட்டுக்களை தேடி எடுத்து வெளியிட்டு உள்ளனர். தொல்லியல் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பல கற்றறிந்த ஆய்வாளர்கள் பயிற்றுவிக்கின்றனர். தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பதன் மூலமே நம் வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

Comments

Popular posts from this blog

வரலாறு அறிவோம் – 4

வரலாறு அறிவோம் - 2