வரலாறு அறிவோம் – 4
வரலாறு அறிவோம் – 4
வேளிர்
சங்க
கால அகழாய்வு தொடக்க நிலையிலேயே உள்ளது. முழுமையாக
ஆய்வு செய்யப்பட்ட பின்னரே வேளிர் வரலாற்றுக்கும் பெருங்கற்சின்னங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினை இன்னும் தெளிவாக அறிய முடியும். இதுவரை
கிடைத்துள்ள கல்வெட்டுகள், அகழ்வு சான்றுகள், சங்க
இலக்கியங்கள் ஆகியவற்றை வைத்து வேளிர் குறித்து அறிந்து கொள்ளலாம்.
சங்க
காலத்துக்கு முன்னரே வேளிர் உருவாகி விட்டனர். வேளிர்
எழுச்சிக்கும் வணிக வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால்நடைகள்
செல்வமாக கருதப்பட்டது. எனவே ஆகோள்
பூசல் தொடர்ந்து நடைபெற்றது. அதில் வென்றவர் முதலில் வேளாக ஏற்கப்பட்டு
பின் காலப்போக்கில் அமைதிக் காலங்களிலும் வேளாகவே நிலை பெற்று இருக்கலாம்.
ஒவ்வொரு
தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும். வேளிர்
என்ற சொல் வெள், வெளிச்சம்
ஆகியவற்றில் இருந்து உருவான சொல் என அரங்கசாமி
அவர்கள் கூறுவார். வெள்ளை, வெண்மை, வெள்ளி
என்ற சொற்கள் வெண்மை நிறம் அல்லது ’ஒளியுடைய’ என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்தன எனலாம்.
கல்வெட்டுகளில்
வேளிர் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. மதுரையில் உள்ள அரிட்டாப்பட்டியில் வொளியன் என்ற பெயரைக் கூறும் கல்வெட்டு ஒன்று
கிடைத்துள்ளது. ”நெல்வெளிஈய் சிழிவன்
அதினன் வொளியன் முழாகை கொடுபிதோன்” இதில் தலைவனை ஒளியன் என்று
வழங்கி உள்ளனர். இதன் பொருள் நெல்வெளியைச் சேர்ந்த ஒளியனாகிய சிழிவன் அதினன்
என்பவர் கற்குகையை அமைத்துக் கொடுத்தார் என்பதாகும். ஒளியன் என்பதும்
வேளைக் குறிக்கும் சொல்லாகும். குடியில் ஒளிமிக்க ஒருவரை பிறர்
தலைவராக ஏற்றுக் கொண்டதே வேள் ஆகி விட்டது.
கொடுமணலில்
இரண்டு பானை ஓடுகளில் ‘வேள்’ என்று
எழுதப்பட்டு இருந்தது. புலிமான்
கோம்பையில் கிடைத்த நடுகல் கல்வெட்டில் வேள் ஊர் என்ற ஊர்ப் பெயர் உள்ளது. மதுரையில் உள்ள மாங்குளம் கல்வெட்டு ”வெள் அறை நிகமதோர் கொடிஓர்” என்று கூறுகிறது. இதன் பொருள்
வெள் அறை ஊரைச் சேர்ந்த வணிகத்தோர் அமைத்துக்
கொடுத்த கற்குகை என்பதாகும். வெள் அறை என்பது வேள் அறை அதாவது வேள் ஊர் ஆக இருக்கலாம். எழுத்தமைதியை
வைத்து மாங்குளம் கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு 5 ஆம் நூற்றாண்டு1 அல்லது அதற்கு முன் என கருதப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புலிமான்
கோம்பை என்னும் ஊரில் கிடைத்த நடுகல் ஒன்றில் “வேள் ஊர் அவ்வன் பதவன்” என்று
உள்ளது. வேள் ஊரைச் சேர்ந்த அவ்வன் பதவன் என்பவருக்கு எடுத்த நடுகல். பதவன் என்பது
பெயர். அவ்வன் என்பது மூத்தோர் என்பதை குறிக்கும் சொல்.
சங்க இலக்கியங்களிலும் வேள், ஆய்வேள், வெளியன் வேள்மான்,
நெடுவேள், மாவேள், பெருவேள்
என்று வேளிர்கள் குறிக்கப் பெறுகின்றனர். பண்கெழு வேந்தரும் வேளிரும் எனப் புறநானூற்றிலும்,
இருபெரு வேந்தரோடு வேளிர் என மதுரைக் காஞ்சியிலும், வேந்தரும் வேளிரும் என பதிற்றுப்பத்திலும்,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிர் என பட்டினப் பாலையிலும் குறிப்பிடப் படுகின்றனர்.
பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய கடையெழு வள்ளல்களில் பலர் வேளிரே.
முருகன் ’பெருவேள்’ என பெருங்கதையில்
குறிக்கப் படுகிறார். 14 வேளிர், 11 வேளிர்,
ஐம்பெரும் வேளிர் என்று பன்மையிலும் குறிக்கப் பெறுகின்றனர்.
வேளிர்கள் வளங்களை பயன்படுத்துவதில்
திறன் பெற்றவர்களாக இருந்து உள்ளனர். பெரில் எனப்படும் பச்சைக்கல் கொங்குப் பகுதியில் மட்டுமே கிடைத்துள்ளது.
வேளிர் ஆட்சிப் பகுதியில் கிடைத்ததால் வேளூரியா என்று அழைக்கப்பட்டு
பின்பு வைடூரியம் ஆக மாறி, இறுதியில் பெரில் என்ற பெயரில் தற்போது
அழைக்கப்படுகிறது. இதனுடன் கனிம வளங்களைப் பயன்படுத்தி அணிகலன்கள்
தயாரித்து அவற்றை வடநாட்டிற்கும், யவன நாட்டிற்கும் ஏற்றுமதி
செய்து பொன்னைப் பெற்றுள்ளனர். பெருவழிகளையும், வணிக நகரங்களையும் உருவாக்கி செழிப்புடன்
வாழ்ந்துள்ளனர்.
கால மாற்றத்தில் வேந்தர் எழுச்சியால்
வேளிர் ஒடுங்கினர். வேந்தர்கள்
பலம் பெற்றனர்.
1. 1. பொ.ஆ.மு 5 ஆம் நூற்றாண்டு - பொது ஆண்டிற்கு முன் 5 ஆம் நூற்றாண்டு. கி.மு மற்றும் கி.பி
எனக் குறிப்பிடுவதை மாற்றி முறையே பொது ஆண்டிற்கு முன் மற்றும் பொது ஆண்டு என தமிழில்
வழங்கப் படுகிறது. Before Common Era (BCE), Common Era (CE)
என ஆங்கிலத்தில் வழங்கப் படுகிறது.
நன்றி:
முனைவர் பத்மாவதி,
முனைவர் மார்க்சிய காந்தி,
முனைவர் வசந்த கல்யாணி,
முனைவர் சசிகலா
ஐயா. பூங்குன்றன்
(தொல்குடி வேளிர் வேந்தர்)
ஐயா. ராஜன்
(கல்வெட்டியல்)
ஐயா. மு. இராகவையங்கார்
(வேளிர் வரலாறு)
ஆகியோருக்கு நன்றி



Comments
Post a Comment